Sunday, January 30, 2011

காதலின் எச்சம்

உயிர்த் தீ பற்றிக்கொண்டு
காதல் திண்டாடும்

இத் தருணத்தில்...

எளிதில்
கேட்டுவிட முடிவதில்லை

தொண்டைக் குழிக்குள்
உருண்டு
வெளிப்படத் தயங்கும்

காய்ந்த உதடுகள்
ஈரமாகுவதில்லை

அச்சத்தின் அதிர்வலைகள்
சுதி மீட்டிப் பார்க்கும்

இருந்தும் விடுவதில்லை..

இன்றேனும் தொடங்கிவிட
உந்து சக்தி உந்திவிடும்

விரும்பியது பெற்றிட
சமுகப் போர்வை
தடை செய்து கிடக்கும்

தடை மீறும் வசதியில்
தண்டனை எனக்கேதும்
இல்லை

முயல்வது நான்
தவிப்பது நீ

காதலின் எச்சம்
எப்போதும்
விடுவதாயில்லை

Monday, November 15, 2010

சொல்லாமல் ஒரு ஆசை!


பூஞ்சோலை பூவின்
வாசம் முகர்ந்து
பூவின் மடி தேடி
அலைகின்ற வண்டெனவே
அருகே அமர்ந்திருக்கும்
உன்னிடம் கேளாமல்
தவித்திருக்கும் மனம்

தீண்டுதலோ தொடுதலோ
அல்லாமல்.. இடைவெளி
இன்னும் வேகம் கூட்டும்
அன்பின் வேறு நிலை!
புதிதாய் ஊற்றெடுக்கும்..

சில்லென்று பரவும் காற்றில்
உடல் விடும் வெப்பமோ
மூச்சுக் காற்றில் வெளியேறும்..
வெளியேறா ஆசைகள்
அணுக்களை பிளக்கும்

கண்டு பிடித்துக்கொள்!
கண்டு பிடித்துக்கொள்!
என்றபடி..
என் கண்களில் விரவிகிடக்கிறது
எல்லை மீறுவது உன் விருப்பமென்ற
செய்தியே!


பின்..
பேச்சுக்கள்... தொடர்ந்தும்
முடிவில்..
விடைபெற்று செல்கிறாய்...
கடைசிப்பார்வையில் நீயும்
சொல்லிச்சென்றாய்...
எல்லை மீறுதல் என் விருப்பமென்று...

ஓ....
மடியில் தலை சாய்க்க
தோற்ற எனக்கு
பூவின் இதழில் கிறங்கும் வண்டு
கேலி செய்கிறது.....
சொல்லாமல் ஒரு ஆசை
காலவதியாகிறது...

மழை

ஒவ்வொரு முறை
வானம் பார்க்கும் பொழுதெல்லாம்
மேகம் பல உருவெடுக்கும்
விழிக்கு விருந்து வைத்து
கற்பனைகளை தூண்டிவிடும்
உள்ளத்தின் உரசல்கள்
மனதின் இறுக்கங்கள்
கரைத்து விடும்...

நீல வான பரப்பில்
வெண்மையாய் ஒளிர்ந்திடும்
ஒப்பனையில்லா அழகில்
ஒரு இணையில்லா
மகிழ்வை அளித்திடும்

பல நாட்கள் களித்திருந்தேன்
மேகத்தின் எழிலில் திளைத்திருந்தேன்

ஒர் நாள்..
நிலவென வந்தாளே
நிலப் பெண் ஒருத்தி
விழி வீச்சில் விழச் செய்தாள்
இமை மூடாமல் ரசிக்க செய்தாள்
மேகத்தை நிலவு மறைத்த
விந்தை நிகழ்ந்திடும்
அப்பொழுதில்
இதயங்கள் உரசிக்கொள்ள
காதல் தீ பற்றியதே

தினம் ரசிக்கும் மேகப்பெண்
கோவம் கொண்டாளோ!
பொறாமயிற் கருத்தாளோ!
கள்ளி யாரிவளென
இடியென சத்தமிட்டாள்
மின்னலென சைகையிட்டாள்

எவ்வித குறிப்பும் உணராமல்
நிலப்பெண் காதலில்
லயித்திருக்க

துன்பம் தாங்கா.... மேகப்பெண்
கண்ணீரால் வீதி நிரப்ப
வற்றாது அழுகின்றாள்

ஹைய்யா! மழை.. மழையென
மழலைகள் கும்மாலமிட்டனர்

வான் நேக்க
மேகம்.. இருள் பூசியிருந்தது..

Monday, July 26, 2010

நீ ஒரு காதல் சங்கீதம்


பூந்தோட்டத்தின் வாசம் கொணர்ந்து
தேனை உதட்டில் தாங்கி
வார்த்தைகளை அதில் ஊறவைத்து
பூனையினை மிஞ்சுகிறாள்

வளையலுக்கும்
மௌனம் பழக்கி
தோகை விரிக்கும் மயிலென
கை விரித்து
மலர் விரல்களில்
பின்னின்று கண் மூடுகிறாள்

விடும் மூச்சில்
வெப்பம் பரப்பி
தொடும் உணர்வில்
விடுகதை விடுகின்றாள்

இதயத்தில் இருப்பவளை
அறியாமல் போவேனோ?
தெரியாமல் தவிப்பதாய்
தெரிந்தே யாரது? என்கின்றேன்...

வளையல் இசைக்கின்றாள்
கொலுசில் சொல்? சொல்?
என்கின்றாள்
விரல்களில் கண்
வருடுகிறாள்
பின்பும்
வீம்புக்கும் இருந்தேன் நான்

இன்னும் நெருக்கமாய்
வாசம் பரப்புகின்றாள்
கேட்டாலும் நெருங்காத காதலி
இன்னும் தன்னை
அறியவில்லையே
என ஏங்குகிறாள்...

தேன் ஊறிய வார்த்தைகளில்
தேடிப்பிடித்து
"ஹுஹம்" தருகிறாள்
பொறுமையின்றி
"லூசு" என்று
தின்னப் பிடித்த
மற்றொன்றை தருகிறாள்

"சங்கீதா"
என்றவுடன்
விருட்டென்று...விரல்
உருவுகிறாள்...

யாரவள்?
விழியில் கோபம் ஏற்றி
முன்னின்று
முடிந்ததா? என் காதல்
என்றாள்

குறும்பாய்ச் சொன்னேன்
விழியழகே! அழகே!
காதல் விளையாட்டு
கண்மனி இதுவென்று
சிவந்த விழிகளை விடு
சிவந்த கன்னம் கொள்

வாசம் சொன்னது
உன் வருகை
நேசம் சொன்னது
உன் விரல்கள்
நெருக்கம் சொன்னது
உன் அன்பு
விடுவதற்கு மனமில்லை
விழிதிறக்க எண்ணமில்லை

நீ காத்திருக்க
காதல் விடவில்லை
வாழ்வின் சங்கீதம்
நீயானாய்.. சங்கீதா வென்றேன்
சங்கதி வேறில்லை..

வெட்கி சிரிக்கின்றாள்
கண் நோக்க மறுக்கின்றாள்

விழிமூடிய நொடிப்பொழுதின்
காதலில் மூழ்குகின்றோம்
சற்றே தள்ளிப் போங்கள்
தனிமை இப்போது
தேவையாயிருக்கிறது

Wednesday, June 23, 2010

தனிமை

மௌனம் நிரம்பி
அழைப்புகள் ஏதுமில்லாமல்
தொடங்கிய நாளில்

வீசுதல் ஏதுமின்றி
நிசப்தத்தின் தன்மை
அறிவித்தபடி....
அறையின் உள் புகும்
காற்று

வார்த்தைகளற்ற
தனிமையின் கவிதையொன்றை
அறையெங்கிலும்
வாசிக்கிறது

எழுதுகோலும் காகிதம்
ரசித்து இருக்க கூடும்
அவையும்
தொடர்பின்றி இருந்தன..

குறுக்கீடு ஏதுமின்றி தொடரும்
இப்பொழுதில்
தனிமை... முழுவதுமாய்
ஆக்கிரமித்து இருந்தது..
விடுபட
விருப்பமில்லாமல்..

உணர்வுகள் உலரும் பொழுதுகள்

கொடும் வாளின் கொல்லும்
தடம் பிடித்து மிரட்டும் தனிமையில்
தீண்டும் காற்றென்னை தீயாய் சுடும்
வேண்டாப் பொழுதாய் கழிக்கவியலா
தலையனையின் தற்காலிக ஆறுதல்
மலையருவியென கண்ணீரில் முளைக்கும்
நேய மணாளன் நினைவில் நெகிழ
சுயமாய் பரவும் உணர்வின் அலைகள்

மாண்டவன் வரவியலா மாளுதலில்
தீண்டா மெய்யில் பொய்யாய் புலர்ந்த விடியல்
வீரியத்தை கூட்டி தனிமையின் கைகோர்த்து
இரவின் விளையாட்டில் இம்சையாகும்
இன்னுமோர் தனிமை பொழுதில்
பெண்ணின் உணர்வுகள் உலர்ந்து...

பிரிவு உணரும் தனிமை

முன்தினம்
கோவத்தின் உச்சியில்
தூக்கியெறியப்பட்ட
நட்பிற்காய்

தொடர்பில் இல்லாத
இந்நாளில்
தனிமை என்னை
திட்டி தீர்க்கிறது...
தாராளமாய்.....

Tuesday, June 22, 2010

தனிமையின் தேவை

"நாளைக்கு வந்திருவேன்" என்றவளை
வழியனுப்புவதில் ஒளிந்திருக்கும்
ஒரு மகிழ்ச்சி!

கேள்விகளோ!
பதில் எதிர்பார்த்தலோ
இல்லாமல்...
ஒரு நாள்
ஒரு தனிமை

ஞாயிற்று கிழமை வேறு..
சொல்லவா வேண்டும்!
அலுவலகம் இல்லை
"ஆத்துக்காரியும்" இல்லை
உணர்ந்தவர்களுக்கே
இத் தனிமை "ஒரு சொர்கம்"

வார்த்தைகளின் "சீற்றத்திலே"
தொடங்கும் காலைப் பொழுதும்
அதிலே முடிவடையும்
மாலைப் பொழுதும்

அலுவலக நாட்களின்.. பரபரப்பு இப்படித்தான்..

புரிந்திருப்பீர்கள்.. இப்பொழுது
இந்த தனிமை...
கேள்விகளோ..
பதில் எதிர்பார்த்தலோ... இல்லாமல்
கழிவது... எவ்வளவு சுகமானது என்று

செல்போன் ஒலிக்கிறது..
"ரிங் டோனில்" தெரிந்தது...
அவள் தான்... அவளேதான்

"நீங்கள் தொடர்பு கொண்ட நபர்
தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்
சிறிது நேரம் கழித்து அழைக்கவும்"

என்றதில்..

ஹும்..

தனிமை ... இப்பொழுது
சுகமாய்...
சிகரெட் புகையின்
பல வடிவங்களில்
வெளிப்பட தொடங்கியிருந்தது...

Tuesday, June 15, 2010

காதல் இதுதானா... காதல் வலிதானா...

தனிமையில் இன்றென்னை விட்டுவிட்டாய்..
ஏனோ... உன் நினைவுகளை கூட்டி செல்ல மறந்துவிட்டாய்
நான் இன்று தவிப்பதும்.. துடிப்பதும்.... உனக்கே..
நீயின்றி நானாய் வாழ்வேனா.... இல்லை
உயிரின்றி... உடலாய்.. கிடப்பேனா...
நீ மறைகிறாய்... நான் கரைகிறேன்
ஓ... காதல்... இதுதானா... காதல் வலிதானா..

நிலவின்றி தவிக்கும் வான் போல
இருள் சூழ்ந்து போனதே! ஒளி என்பது
உன் வரவென்று ஆனதே...
நீரின்றி தவிக்கும் செடி போல
வாடிப் போனதே! வாழ்வென்பது
நீயென்று ஆனதே....
நீ மறைகிறாய்... நான் கரைகிறேன்
ஓ... காதல்... இதுதானா... காதல் வலிதானா..

சொல்லாமல் என் உள்ளே வந்தாய்
ஏனடி.. இன்று கொல்லாமல் கொல்லுகின்றாய்
இல்லாமல்... போவேனே.. நீ இல்லையென்றால்...
மெழுகாய் கரையுதே! உடல்....
காதலில்... உயிர் எரியுதே....
அணைக்கும் விரல்களை தேடுதே...கண்களே!
நீ மறைகிறாய் ... நான் கரைகிறேன்
ஓ... காதல்... இதுதானா... காதல் வலிதானா..

சிறகுகள் பறித்து சென்று... இன்று
தனிமையில் சிறைவைத்தாய்...
உறவொன்றில் விலகிச்சென்று..
கண்ணீர் பரிசு தந்தாய்...
இல்லாமல்... போவேனே.. நீ இல்லையென்றால்...
மெழுகாய் கரையுதே! உடல்....
காதலில்... உயிர் எரியுதே....
நீ மறைகிறாய் ... நான் கரைகிறேன்
ஓ... காதல்... இதுதானா... காதல் வலிதானா...

அன்பில் ஒரு பொய்


"அப்பா! எப்பமா வருவார்"

மழலையிடம் எழும்
வினாவில்

நாளைக்கு...

என்றதில்

அன்பில் ஒரு பொய்
நிரப்புகிறாள்

அப்பாவோ
சிரித்தபடி
புகைப்படத்தில்
ஒரு நினைப்பை
விதைக்கிறார்

மழலையின்
மற்றொரு முறை
இதே வினாவுக்கு....

பதிலுரைக்க
கண்ணீர் நிரப்புகிறாள்
இன்றே!...

அடிச்சேன்னா! பாரு

காத்திருக்கும் பொழுதுகளில்
மலரில் முத்தமிட்ட
வண்டொன்றை கேட்டேன்

"உனக்கெப்படி தாரளமாய்
இப்படி ஒரு அனுமதி" யென்று

"அது மட்டும் ரகசியம்" மென
ரீங்காரமிட்டு சென்றது..

இதோ அவள் வருகிறாள்
இம்முறையும் கேட்பேன்

"அடிச்சேன்னா! பாரு"

இப்போதே அவள் குரல்
காதை திருகி ஒலிக்கிறது

Tuesday, May 25, 2010

என்னவென்று நான் பேசலாம்!

வாசமாக மலர்கள் பேசலாம்
உன் தலைச்சூட நாளும் ஏங்கலாம்
மழையாக வானம் பேசலாம்
நீ நனைவதால் மகிழ்ச்சி கொள்ளலாம்
ஒளியாக நிலவு பேசலாம்
உன் அழகு குறிப்பை கேட்டு வாங்கலாம்
ஒலியாக பறவைகள் பேசலாம்
உன் பேச்சில் மயக்கம் கொள்ளலாம்
கருணையாக இதயம் பேசலாம்
உன் இரக்கத்தில் மனிதம் வாழலாம்
கவிதையாக காதல் பேசலாம்
நீயென்பதால் வார்த்தைகள் இனிமையாகலாம்
மௌனமாக கண்கள் பேசலாம்
அழகுக்கோர் அழகும் ஆகலாம்
என்னவென்று நான் பேசலாம்
சொல்! எப்படி உன்னுயிரில் கலந்துபோகலாம்....

Saturday, May 22, 2010

காதலினால்.. உன் காதலினால்...

அன்பே உந்தன் நினைவுகள் இங்கே
உள்ளம் சூழ்ந்து கொல்லுதே
கண்ணில் ஒரு வெள்ளம் இங்கே
என்னை இழுத்து செல்லுதே

காதலினால்.. அது உன் காதலினால்...


மை பூசிய விழிகள் என்னை
மறந்துதான் போனதென்ன
கை கோர்த்து நடந்த நாட்கள்
விலகித்தான் போனதென்ன
நெருக்கம் தான் பிரிந்து சென்று
வேடிக்கை பார்க்குது இன்று
இனிவருமா அந்நாட்கள்
மனமின்று கேட்கிறதே
பதிலேதும் இல்லாமல்
மௌனம் ஒன்று நிறைகிறதே


இரு கைநீட்டி மழைநீரில் நீயும்தான் நனைத்தாயே
ஒரு கைப்பிடித்த நீராலே முகத்தில்தான் அடித்தாயே
நனைவோம் வா என்று என்னைத்தான் இழுத்தாயே
தலை நனைத்த மழைத்துளியை வளைகரத்தால் துடைத்தாயே
தாவணியால் குடை ஒன்றை பிடித்தாயே

மழைக்காலம் வரும் போதெல்லாம்
சொல்லும் அவை நம் கதைகள்
இனிவருமா அந்நாட்கள் மனமின்று கேட்கிறதே
பதிலேதும் இல்லாமல் மௌனம் ஒன்று நிறைகிறதே
பெய்யும் மழைத்துளிகள் இன்று உன் ஞாபகங்களை தெறிக்கிறதே
பொய்யோ உன் பிரிவென்று இதயம் இன்னும் துடிக்கிறதே

காதலினால்.. அது உன் காதலினால்...

உயிர் உருக்கும் நிமிடங்கள்

"சொல்லியாச்சு"

பெரு மூச்சு விட்டபடி
இளைப்பாறிக் கொண்டிருந்த
காதலை சொல்லத்
தவித்த நாட்கள்...

விளையாட்டின்
வெற்றி தோல்வியை
நிர்ணயிக்கும்
கடைசி நிமிடங்களாய்
சுருங்கி

உயிரில் உருகியபடி...

ஒப்புதலுக்கு
கரைந்து கொண்டுடிருந்தன

Saturday, May 8, 2010

மற்றுமொரு நாள் காத்திருக்கும்

கோடையில் சருகாகும்
மரங்களில் விழும்
மழை நீர் உயிராகும்

மரமென நானிருந்தேன்
உன் விழிப்பார்வையில்
நான் உயிரானேன்

பற்றுதற்கு தவிக்கும்
கொடிக்கு துனையாகும்
கொம்பே உறவாகும்

கொடியென நானிருந்தேன்
உன் விழிப்பார்வையில்
உறவென்று பற்றானேன்

யாசிக்கும் மனிதருக்கும்
பசி நிறைக்கும்
உணவே வாழ்வாகும்

யாசிப்பவனாய் நானிருந்தேன்
உன் விழிப் பார்வையில்
நேசிக்கும் வாழ்வடைந்தேன்

வருந்தும் உள்ளத்திற்கும்
தேற்றும் ஆறுதல்
ஒரு மருந்தாகும்

வருந்தியவனாய் நானிருந்தேன்
உன் விழிப்பார்வையில்
துயரம் துறந்தவனானேன்

முற்றும் துறந்தவருக்கும்
ஒன்றினை பற்றுவதே
பேரின்ப மகிழ்வாகும்

பற்றற்று நானிருந்தேன்
உன் விழிப்பார்வையில்
பேரின்பம் பெறலானேன்

விழிக்கொரு மொழியிருக்கும்
ஒலியின்றி பல
பொருளுரைக்கும்

ஒலியின்றி நானிருந்தேன்
உன் விழிப்பார்வையில்
பொருட்டென மாறினனே...

இன்னும் பலவிருக்கும்
உன் பார்வைக்கு
என்னோடு...
மற்றுமொரு நாள் காத்திருக்கும்

"டாட்டா"

"செல்லம்.. அம்மா.. பாய்டா!"

தொடரும்
பிஞ்சு விரல்களின்
கையசைப்பில்

 அலுவலகம்
ஒரு இடைவெளியை
நிரப்பியிருந்தது...

Monday, May 3, 2010

வழியும் புன்னகை

சட்டெனப் பூக்கும் பூவின்
மலர்ச்சியென மழலையின்
கன்னக்குழியில் கபடின்றி
வழியும் புன்னகை
விளக்குதற்கோ விளங்குதற்கோ
அவசியமற்று ஓர்
அவசியத்தை கற்பித்து
தேங்குமே இதயத்தில்..

"சார்ஜ்" இன்றி

விளைவுகளின்
கவலையின்றி
மின்சாரக் கம்பிகளின்
மீதமரும் பறவைகளென
காதலின் மீதமர்ந்து
காத்திருக்கிறேன்
பறவையை புறக்கணிக்கும்
மின்சாரமாய்
உன் தவிர்த்தலில்
"சார்ஜ்" இல்லாமல்
தவிக்கிறது "காதல்"

Wednesday, April 21, 2010

என்ன என்ன மாற்றங்கள செய்யப் போகிறாய்..

விண்ணில் விளையாடும் நிலவென்றேன்
கண்ணில் உனைக்காணும் வரை அதுவே அழகென்றேன்
அடை மழைக்காலம் குளிர்ச்சியென்றேன்
அட! உனைக்காணும் வரை அதுவே மகிழ்ச்சியென்றேன்

வருடும் தென்றல் சுகமென்றேன் நீ
வரும்போது அதுவொரு சிறுசுகம் உணர்ந்தேன்
காண்பவை மகிழ்வென்றேன் உனைக்
கண் பார்த்த பின் நீயே அதில் முதல் என்றேன்

இப்படி நிலை மாற்றி என் உள்ளே புகுந்து விட்டாய்
எப்படி ஒரு பார்வையால் இதைச் செய்து விட்டாய்
மையெழுதும் காரிகையே நீ காதலெழுதிவிட்டாய்
கவியெழுதும் பாவலனாய் மாற்றியெனை விட்டாய்

இதோ! இதோ! நீ வருகிறாய்.. மீண்டும்
அதே! அதே! பார்வை யொன்றை வீசப் போகிறாய்
இன்னும் என்ன என்ன மாற்றங்கள் இனி
என்னிடத்திலே செய்யப் போகிறாய்?

முதன் முதலாய்..

"ஒரு வேலைகூட செய்யறதில்லை"
தினம் அம்மாவிடம்
அர்ச்சனை பெறும் அவளும்

"ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லை"
காலையில் காதுகளில் பாயும்
அப்பாவின் ஆதங்கத்துடன் அவனும்

"பாக்கெட்" பால் வாங்க
நிற்கும்வரிசையில்
பார்வைகள் பரிமாறிக்கொண்டு
"ப்ராக்கெட்" போட்டுக்கொள்ள

அர்ச்சனையும் ஆதங்கமும்
அவசியமற்று போனது
மறுநாள் முதன் முதலாய்..

"வெயில் - ஒரு இலவசத் திட்டம்"

சூரியனின்..
கோடைக்கால
சிறப்பு ’மொட்டைத் திட்டம்’
"வெயில்" ல்

மொட்டை அடித்து
கொண்டன மரங்கள்

மரங்கள்
ஏமாற்றப்பட்டதாக
புகார் எழுப்புகிறது
"காற்று"
அனலை வீசியபடி..

எதிர்க் கட்சியின்
புகாரை புறந்தள்ளி
மொட்டை மரங்களின்
எண்ணிக்கை கூடி

"வெயில்" திட்டம்
வெற்றி பெற்றதில்

"வறட்சி" க்கான
ஆலோசனையில்
தீவிரப்பட்டது
"சூரியன்"


குளிர்சாதன அறைகள்
வழக்கம் போல
திட்டம்
சரியா? தவறா? யென
விவாதத்தை
முடிப்பதாயில்லை

Thursday, March 11, 2010

எல்லாமாத்தான் நீயிருக்க

நீயுமில்ல நானுமில்ல
பொண்ணுதா இல்லாட்டா
உலகத்தில யாருமே இல்ல

உசுரக் குடுக்கிற
அம்மாவா நீயிருப்ப

பாசத்த பங்கு போட
பாசமா சண்டபோட
அக்காவா தங்கச்சியா
நீ பொறப்ப

அறிவுரைப்ப நீ ஆறுதலா
தோழியா துணையிருப்ப

அம்மாவுக்கு மறுவுருவா
பொஞ்சாதியா கைப்பிடிப்ப

உசுருக்கு உருவமா
மவளாத்தான் வரமாவ

கற்பனயில்ல இது கதையுமில்ல
எல்லாமாத்தான் நீயிருக்க
பொய்யுமில்லை புரட்டுமில்ல
ஒரு சக்தியாத்தான் நீயிருக்க

என்ன சொல்ல ஏது சொல்ல
பெரும சொல்ல ஒருநாளு போதவில்ல
வாழ்த்த சொல்ல புதுசா
வார்த்த ஒன்னும் தோணவில்ல

நீயுமில்ல நானுமில்ல
பொண்ணுதா இல்லாட்டா
உலகத்தில யாருமே இல்ல....

Tuesday, February 9, 2010

மக்கள் ஆட்சி

சாலையின் பள்ளங்களில்
மக்களின்..
தடைபடும் பயணங்கள்

பல நாட்களாய்..
காட்சிப் பொருளாய்
காப்பற்றிய அரசு

ஓர் நாளில்..திடிரென!
பூக்கும் காளானாய்!
சாலையின் பள்ளங்கள்
சமப்பட்டுப்போக

விரிந்த விழிகளில்
ஆச்சரியம்!

"இன்று வருகிறார்"
வாசகம் தாங்கியபடி..

"இந்தியாவின் இளவரசர்"
சுவரொட்டியில் சிரிக்கிறார்


"மக்கள் ஆட்சி" யில்
வருகைக்கு காத்திருக்கு
இன்னும்.. பல சாலைகள்
இங்கும் வந்து போகட்டுமென...

Friday, November 13, 2009

காதலில் விழுந்த கவிதை

விழிமலர உன் இதழ் விரிய சிந்திய சிரிப்பால்
வழித்தேடி என் மனம் நிறைந்ததே! பூரிப்பால்
முகம்மலர உனைநோக்கினனோ! அன்பால்
அகம்மகிழ உருக்குதென்னை காதல் பிறப்பால்

விண்ணிருக்கும் நிலவும் நீ என்பேனே!
கண்ணிருக்கும் பார்வையும் நீ என்பேனே!
கள்ளிருக்கும் இதழும் நீ என்பேனே!
உள்ளிருக்கும் உயிரே நீ என்பேனே...

விழிக்கூறும் உன் மௌன மொழிகூட தருதே சுவை
எழில்தரும் உன் நளினமும் தாங்குதே! காதலின் தேவை
எனை மீட்டும் உன் பெயரிலும் ஒரு அழகிய இசை
உனைத்தாங்கும் வரைதான்.. என் இதயம் துடித்திடவே ஆசை

மழையென நனைத்தாய் உயிர்வரை அன்பாய்
தழைத்தோங்கும் செடியென வாழும்வகை மாற்றினாய்
நினைத்தேங்கும் காதல் உள் நிரப்பி வைத்தாய்
அணைத்தேங்கும் நீராய் ஆசைகள் பூட்டி வைத்தாய்..

உறவென நீ வர எதிர்ப்பார்க்கும் என் நெஞ்சம்
சிறகெனவே பறக்கும் எனதாசைகள் உன்னிடமே தஞ்சம்
சிறு பிள்ளை ஆவேனே உன்னோடு நான் மஞ்சம்
திருநாளை வரவேற்க என் நாட்களும் கெஞ்சும்

இனிய மொழிப்பேச்சும் விழிவீச்சும் உன்னிடத்திலே
இனிக்கும் தருணங்கள் இனிவசமாகட்டும் என்னிடத்திலே
இனியவளே இனி என் வாழ்க்கை உன்னிடத்திலே
இனி உரைக்க என்ன உண்டு என்னிடத்திலே...

ஹும்..!!!

நீ
ஓடி ஒளிகிறாய்!
எனக்கு
மூச்சிறைக்கிறது...

Friday, November 6, 2009

தீபாவளி

இன்னல் தரும் நாட்களின்
இருள் அற்றிருக்க

விடிகின்ற பொழுதில்
மனிதம் இருளாதிருக்க

மனதில் ஒளி ஏற்றி
தீபச்சுடராய்...

திகழ்ந்திங்கே இனி
விளங்கட்டும் தீபாவளி

Thursday, October 22, 2009

உவமைகள் யாவும் உனக்கே சொந்தம்!

அன்பே! எனதுயிரே..

ஆதவன் இரவை அணைத்து
வெளிச்சமாவது போல்..
என்னை நீ அரவணைத்ததாலே
வாழ்வின் வெளிச்சம்!

பூ வரையும் ஓவியன்
இலைகளும் வரைவது போல்..
உன் காதலால்
என்னையும் தாங்குகிறாய்!

இலைகளின் மீதுள்ள
பனித்துளிகள் போல்..
காத்திருப்பேனென ஒடிவந்தாயோ
நெற்றியில் வியர்வை துளிகள்!

கடற்கரை மணலில்
பதிந்த கால் தடங்கள் போல்..
உன் முத்த சுவடுகள்
இதயத்தில் பதிந்து கிடக்கிறது!

திடுக்கிட்டு இரவில்
அழுகின்ற குழந்தைபோல்..
நீ இல்லாத பொழுதுகளில்
கண்கள் அழுகின்றதே

சூழ்ந்துள்ள நீரால்
வளம் பெறும் நிலம் போல்..
எனைச் சூழ்ந்த உனதன்பு
சொல்லவும் வேண்டுமோ எனதுயர்வு!

கடலில் பிறந்த முத்து
மங்கையருக்கு அழகாவது போல்..
என்னில் பிறந்த உவமைகள்
யாவும் உனக்கே சொந்தம்!

தாயின் கதகதப்பில்
இருக்கும் குழந்தை போல்
உன் நினைவின் கதகதப்பில்
வாழ்கிறேன் என்றும்..

அன்பே! எனதுயிரே...

Saturday, September 12, 2009

அடடா.. இதுதான் காதலா...

மாலைப்பொழுது இதமான காற்று
சில்லென்று வீச..
"இன்றென்ன பவுர்ணமியா"
வியந்து பார்க்கையில்
"நீ" வந்தாய் மாடியில்

வேறுதிசை மறந்த கண்கள்
உன்னையே! பார்க்க..
ஓரக்கண்ணில்.. என்னை வைத்து
கவனியாது போல்!
காதல் செய்கிறாய்..

"அன்பே! திரும்பிப்பார்"
காற்றில் தூது அனுப்புகிறேன்
வார்த்தைகளை..
இதயம் சென்றதுவோ! வார்த்தைகள்
"சட்டென திரும்பினாய்"

உன் பார்வை அம்புகள் குத்த
என் கண்களுக்குத்தான்!
எத்தனை ஆனந்தம்!!

மெல்லியதாய் உன் சிரிப்பு
அடடா... அடடா....
இன்னுமொரு பிறவி வேண்டும்..

ரசித்து பின்..
முத்தமொன்று கேட்கிறேன்..
"சினுங்கலாய்.. முடியாது" என்கிறாய்
கெஞ்சுவதிலும் சுகம்தான்!

எப்படியோ...

முத்தங்களை..
உள்ளங்கையில் இட்டு
உன் மூச்சும் சேர்த்து
என்னிடம் ஊதிவிடுகிறாய்!

முத்தங்களை வாங்கிகொள்கிறேன்
உன் மூச்சை என் மூச்சில் சேர்த்து கொள்கிறேன்

சேமித்து வைக்கிறேன் முத்தங்களை...
இப்படியே..
பின் நாளில் உனக்காக..

Sunday, August 30, 2009

தெய்வமிருப்பது எங்கே?

உடல் வருத்தி..
உள்ளம் உருகி...
தெய்வமிருப்பது எங்கே?
தேடி.. தேடி...
எங்கெங்கே..!!!
அலைந்து..

வீட்டில் நுழைகையில்
வாசலில் இடித்து
அம்மா..... என்றேன்..
"என்னப்பா ஆச்சு!"
என்றபடி..
வலி தீர்க்க.. வந்தபோது
தெய்வம் கண்டேன்...
எளிதாக...

Wednesday, August 26, 2009

கவிதை நட்பு

எப்போதும் போல இன்றும்
அதிகாலை ரம்மியமாயிருந்தது..

அலுவலகம் கிளம்பும் பரபரப்பு...
நேரத்தில் சென்றடைய
வேகப்பயணம்..
மனதில் ஓடிய முடிக்கபடவேண்டிய
வேலைகள்...

இத்தனையும் என்னில்
பரவியிருக்க..
அலுவலகம் சேர்ந்ததில்
மனம் இளைப்பாறியிருந்தது

வழக்கமான
ஒர்குட் வலைப்பக்கம் கவிதைகள்
பார்வையிடுதலில்
தோழியின்
பிறந்தநாள் செய்தி
இனிமைகூட்டியது..

"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் "

.. என்ற என் வாழ்த்துக்கு பின்
மனம் இன்னும் மகிழ்வானது

ஆச்சர்யம் என்னுள் பரவ..

விடையாயிருந்தது..
முகம் காணா நட்பிற்கு
கவிதை நட்பாயிருந்தது..

Monday, August 24, 2009

முரண்

செல்லம்! சாப்புடுறா கண்ணா!
நெய்யூற்றி! பிசைந்த சாதத்தோடு
குழந்தையுடன் போராடி சலித்து..

"அம்மா" "தாயே" எனும் அழைப்பில்
வாசல் திரும்பியபோது!

பிச்சை கேட்டு நின்றவளின்
தோளில் இருந்த குழந்தை
சொன்னது "அம்மா பசிக்குது"

Monday, August 3, 2009

நட்பு

இரத்த சொந்தமில்லை
எதிர்பார்க்கும் உறவுமில்லை
எதற்கும் தயக்கமில்லை
மனம் மறந்ததுமில்லை
பகிர்தல் விட்டதுமில்லை

இப்படி இல்லை இல்லை
உனக்கீடு எதுவுமில்லை
நட்பே! நட்பே! நட்பே!

நீ மட்டும் இல்லையென்றால்
உலகம் சுருங்கிப் போயிருக்கும்
வாழ்க்கையும் குறுகிப் போயிருக்கும்

நட்பே உனது வட்டம் பெருக்கிவிடு
மகிழ்வின் எல்லை விரித்துவிடு...

Monday, July 13, 2009

காத்திருக்கிறேன் வா! காதலுடன்

உள்ளங்கள் இடம் மாறி
வெள்ளமென ஆசையாச்சு!
கண்ணால பாய்ச்சுற காதலால
தன்னால வாழுதென் மூச்சு..

உடல் கொண்ட காதலல்ல
உயிர் கொண்ட காதலிது!
உடல் விட்ட பின்னாலும்
உயிர் விட்டு போகுமோ?

உணர மறுக்கும் சமுகத்தின்
உலகம் மறந்து போ!
உலகம் உணர்ந்து கொள்ள
உருவம் தந்து போ!

பார்த்திருக்கும் விழி உன்னை
சார்ந்திருக்கும் இதயம் சந்திக்க
பூத்திருக்கும் புது பூவாய்
காத்திருக்கிறேன் வா! காதலுடன்

Monday, March 23, 2009

நான் உன்னை காதலிக்கிறேன்!!!!!

முதல் முறை உன்னை பார்த்த..
அந்த நிமிடங்களில்!
என்னை மறந்து உன்னில் தொலைந்தேன்

இருள்கூந்தல் விலக்கி..
உன் கண்கள் ஏற்றிய பார்வை ஒளியால்!
என்னில் புகுந்து..
இதயத்தை உனது வசமாக்கினாய்

உன்னை மட்டும் பார்க்காமல் போயிருந்தால்!
வாழ்வின் அர்த்தம் புரியாமலே போயிருக்கும்!!

பிரம்மன் படைப்பின் சிறப்பு படைப்பு நீ!
வர்ணிக்க வார்தைகள் இல்லாமல்..
வாடும் ரசிகன் நான்

சிறைப்பட்டு எனது மனம்!
விடுதலை பெற விருப்பமிலாமல்..
உனது அன்புச்சிறையில்
ஆயுள்கைதியாக! அடம் பிடிக்கிறது..

உன் நிழலென எனை மாற்றினாய்!
நித்தமமும்
நினைவுகளிலும் நீயே வந்து போகிறாய்..

நீ பார்ப்பதனாலேயே..
நான் அழகாகிறேன்!!

இப்பொதெல்லாம்...
உனது கொலுசொலியும்! சிரிப்பொலியும்!
நான் ரசிக்கும்..
இசை ஒலிகள் ஆனது

உன் கூந்தல் ஏறும் பூக்கள் கூட வாடமல்!
தன் வாழ்நாளை கொஞ்சம் நீட்டி வாழ்கிறது

உனைப்பார்க்காத நாட்கள்தான் என் வாழ்வின்
இருண்ட நாட்கள்! நாட்காட்டியில் இறந்த நாட்கள்!

மொத்தத்தில்.. உன்னிடம் அடிமைப் பட்டு
வாழ்ந்திட ஏங்குது.. இந்த ஆணின் மனம்

ஏய்... பெண்ணே!!
நான் உன்னை காதலிக்கிறேன்!!!!!

Friday, March 13, 2009

பெண்மையை போற்று நீ தினம்

மலரும் சிரிப்பாலே
மழலை மொழியாலே
சுட்டிச் செயலாலே
கட்டிக் கரும்பாக
சிறு பெண்கள்

துறுதுறுவென அறியத்துடிக்கும்
சுறுசுறுவெனெ செயல்களாலே
கலகல சிரிப்பொலிக்கும்
கடிமனதையும் கரைக்கும்
வளர் பெண்கள்

பருவத்தால் படபடக்கும்
புருவத்தால் கலைசிறக்கும்
காண்பவரின் கவனம் திருப்பும்
அழகுவெட்கம் அணிந்திருக்கும்
கன்னிப் பெண்கள்

இதயத்தில் பாதுகாத்து
இனியவளாய் சுவைகோர்த்து
உற்றவனின் உயிராக
உணர்வுக்கு உணவாக
மனைவியாய் பெண்கள்

உயிர்தாங்கி உயிர்கொடுத்து
வலிதாங்கி பிறப்பெடுத்து
உண்மை அன்பின் பொருளாகி
பெண்மை பெற்ற சிறப்பாகும்
தாயான பெண்கள்

எந்நிலை நேரினும் வீழாது
வாழ்த்தும் மனம் நிலைதாழாது
தம்மக்கள் சுகம் தன்சுகமாய்
தியாக தீபமாய் சுடரும்
முதிர் பெண்கள்

மாற்றங்கள் நிகழ்ந்தாலும் பலநிலை வாழ்வில்
பெண்கள் துனையின்றி எதுவுமில்லை
பெருமை சொல்ல வார்த்தைகளோ போதவில்லை
பெண்மையை போற்று நீ தினம்
உண்மைதானே கொண்டாடு பெண்கள் தினம்

Thursday, February 26, 2009

குழந்தை

மானே தேனே நீயேதானே
இனிக்கும் இன்பம் உன்பேச்சில்தானே

வாழ்க்கை வசந்தம் தானே
வாழும் சூழும் பாசம்தானே

என்னுயிர்க்கு நீ உருவம்தானே
உனைச்சுற்றும் பக்தன் என்பேனே

உன்னில் என்னை கண்டேனே
உணர்ந்திட மகிழ்ந்திட சுகமென்பேனே

அம்மாவென்று அழைத்தாய் சுவைத்தேனே
சும்மாவே சுரக்கிறாய் இதழில்தானே

பெருமைக்கு ஆளானேன் நானே
பெண்மைக்கு பொருளானேன் உண்மைதானே

இயலாமை

வெற்றுக்கூச்சல் பகல் வேடம்
வேடிக்கை மனிதர்கள்
அன்றாட வாழ்க்கையில்
அலுத்துப்போன காட்சிகள்

அடுத்த வீட்டில் அலறல் என்றாலும்
தமக்கில்லை என
செவிடாகும் காதுகள்
குருடாகும் கண்கள்
வாய் பேசும்.. மனிதாபிமானம்

இயலாமை இயல்பாய்
இணைந்து இருக்கையில்
உயிர்த்துண்பம் உணரமுடியுமோ?
நடப்பதென்னவோ இலங்கையில்தனே!!

சட்டங்களின் பிடியில்
உணர்ச்சிகள் எங்கே?
அரசியல் முறைகளில்
அறிவுதான் எங்கே?

கிளர்ச்சியூட்டும் பேச்சுக்கள்
போராட்டம் கடையடைப்பு
தீக்குளிப்பு... பழகிப்போனோம்
என்றேனும் ஒன்றானோமா?

கலங்கிய கண்களோடு
கொடுதுண்பம் மக்கள் படும்நிலை
கவிதையாய் உருமாற்ற முயன்றாலும்
என் (நம்) இயலாமை விரக்தியாய்
வியாபிக்கிறது கண்ணீராய்...

ஆறுக்குள்ள ஐந்து!!!


பகுத்தறிந்த செயல்களா? இங்கே
எழுத்தறிந்த மேதாவிகள் செய்வது
நீதிக்குதான் பொருந்துதோ?

கலவரக்கூடம் நீதிமன்றம் இங்கே
கருப்பு சட்டை நீதிமான்கள்
காக்கிசட்டை காவலர்கள்
கல்லுக்கும் கம்புக்கும் வைக்கிறர் சோதனை
பார்பதற்கு இது என்ன வேதனை?

தனி மனிதன் சட்டத்துகுள்ள தவிக்க
தலைக்கண கூட்டம் சட்டத்தை மிதிக்க
கண்முன்னே காட்சிகளா பார்க்க
எதுதானுண்டு இந்த ஐந்துகளை ஆறாக்க?

Saturday, February 14, 2009

அன்பே என் ஆருயிரே!!!


என்னானு எனக்கு தெரியல
எதாச்சு அதுவும் புரியல
தூக்கம்தான் போச்சு சிலநாளா
எம்மேல காதலுன்னு நீ சொன்னதால

சோதனைதான் பல உருவில் காதலுக்கு
சொல்லிதான் தெரியனுமா அது உனக்கு
சந்திக்கலாமுன்னு சொல்லிப்புட்ட காதலர் தினத்துல
வந்துருச்சு தவிப்புதான் இதயத்துல

அந்த பக்கம் சிவசேனா
இந்த பக்கம் ராமசேனா
கத்துறாங்க விடுவேனா
சுத்துறாங்க தலைப்பேனா

கண்ணை பறிச்சு வில்லை முறிச்சு
காதல் பண்ணாரு ராமரு
பொண்ணை தூக்கி காதல தாங்கி
கல்யாணம் பண்ணாரு சிவனாறு

கடவுளெல்லாம் காதலிச்சா கும்பிடுறாங்க
கும்பிடுறவங்க காதலிச்சா குமுறுறாங்க
கோபிக்காத காதல வாழ்த்தா அனுப்புறெங்க
உண்மையான காதலுக்கு தனி தினம் தேவையில்லங்க

இனிமேலும் தாங்காது மனம்


ஏன் எனெக்கென்ன ஆச்சு
உன் எதிரில் வாங்குது மூச்சு
பேசுற கண்ணுல பேச்சு
மனசுல பொங்குறேன் காதலாச்சு

என்னென்னவோ நினைக்கிறென் ஏங்கி
இதயத்திலதான் உன்னை தாங்கி
வாழுறென் நானும் மயங்கி
சேர்ந்திடு நீதான் மனமிரங்கி

கண்ண மூடுனா நீதான் தெரியிற
கனவா வந்து என்னை வாட்டுற
ஏன் இப்படி பண்னுற
கொல்லாம நீயும் கொல்லுற

இனிமேலும் தாங்காது மனம்
வருது இப்போ காதலர் தினம்
சொல்லிவிடு உன் காதல் எண்ணம்
இதற்கில்லை ஈடு இது திண்ணம்

Saturday, February 7, 2009

காதல் வந்தால்....

அலை பேசியில்
அழைத்து
அன்பே!
நீ பேசினால்
சப்தமில்லா வார்த்தைகளும்
அர்த்தமாகும்
சப்தங்களும் வார்தைகளாகும்

அருகினில் வந்தால்
கண்கள் பேசும்
வாய் ஊமையாகும்

நினைவில் வந்தால்
நீ கவிதையாகும்
விந்தை எனக்கே புதிருமாகும்

உறக்கத்தில் வந்தால்
கனவாகும் உன்னருகே
என் செயல்கள் தைரியமாகும்

பிரிவு வந்தால்
உடைந்து போகும்
உயிர் நீ என உண்மையாகும்

Thursday, January 29, 2009

உனை நினைக்க ஒரு நாள்!!


அமைதியாய்..
ஆர்ப்பரிக்கும் கடலே!
ஆழிப்பேரலையாய்
சிரித்து சிதைத்து..
வாரிச்சுருட்டி வலிமைக்காட்டி
ஆனதோ!
ஆண்டுகள் நான்கு

இப்போதுதான் தெரிகிறது
உனை நினைக்க
ஒரு நாள்! வேண்டுமென்பதில்
இத்தனை இழப்புகளா?
எங்களுக்கு

நீ வற்றினாலும்
வற்றுமோ எங்கள் கண்ணிர்
வடுவாகிப்போன வாழ்வுக்கு

புத்தாண்டே நீ வருக!


அன்பை வெளிக் கொணர்ந்திங்கே
மானுடம் வாழ வைப்போம்
மனதில் நல்லெண்ணம் வளர்த்திங்கே
பயனுற வாழ்ந்திடுவோம்
இனிய சொல் இயம்புதற்க்கே
இனியேனும் முயற்சிப்போம்
பணிவாய் பண்பாய் பழகுதற்க்கே
துணிவாய் முடிவெடுப்போம்
இருந்தது இவ்வாறென வாதம்களைந்திங்கே
இனிசுகமெனும் நிலைபடைப்போம்
படைத்தவன் யாரென சண்டை விட்டிங்கே
பலர்நலம் வாழ பழகிக்கொள்வோம்
புதுவிடியல் புதுச்சிந்தனை பெற்றிங்கே
பொலிவாய் வாழ்ந்திட! புத்தாண்டே நீ வருக!

கொண்டாடுவோம் போகிதனை


நற்சிந்தனை துடைப்பம் கொண்டு
மனதின் அழுக்குகள் கூட்டி பெருக்கி
அகத்தே மண்டியிருக்கும் மாசுகளை
அறிவுறு ஒட்டடை கோல் கொண்டு
துடைத்து நீக்கி ஒன்றாய்
இனிதான காலைப் பொழுதில்
தீயிட்டு திரும்ப வாராமல்
எரித்து கொண்டாடுவோம் போகிதனை

பொங்கலோ பொங்கல்


எங்கும் நிறை வளமும்
தங்கும் நிரந்தர செல்வமும்
பொங்கும் மன மகிழ்வும்
யாவரும் பெற்றிடவே பொங்குவோம்
பொங்கலோ பொங்கல்

உழுது உயிர்காக்கும் உழவர்
தொழுது போற்றி நல்
பொழுது நிறைந்திட எவர்க்கும்
நன்றாய் விளங்கிடவே பொங்குவோம்
பொங்கலோ பொங்கல்

கலத்தில் காத்த விதைநெல்
நிலத்தில் விதைத்து வளர்
காலத்தில் கதிராய் முற்றி
செழுமை தந்தாய் கதிரவா!
பொங்கலோ பொங்கல்

பொங்கட்டும் உள்ளத்தில் அன்பு
தங்கட்டும் மனிதரில் மனிதம்
நீங்கட்டும் இன மத பேதம்
நன்றாய் ஒன்றாய் வாழ்ந்திட
ஏதுவாய் உலகமிருந்திட பொங்குவோம்
பொங்கலோ பொங்கல்

Thursday, December 11, 2008

காதல சொல்லு தன்னால

என்னமோ நடக்குது எனக்குள்ள
எப்படிதான் ஆணேனோ தெரியல

உள்ளுக்குள்ள புகுந்து உசிரத்தான் எடுக்கிற
உங்கிட்ட சொல்லாமத்தான் நான் முழிக்கிற

மீன்கள் வலைவீசுது உன் கண்ணால
மீளம மாட்டிக்கிறென் ஏன் உன்னால

சின்ன சின்ன ஆசைகுள்ள சிக்கிக்கிட்டேன்
சிக்க வைச்ச பொண்ணு நீ சிரிச்சதால

மாறிப்போனேன் நான் சுத்துறேன் உன் பின்னால
மனசுகுள்ள வந்தவளே காதல சொல்லு தன்னால

உயிரே!

உன் சிந்தனையில் வாழ்வது
என்றானேன்..

விழி வழி புகுந்து
உயிர் வரை ஆனாய்..

சிந்திக்கும் சுகம் நீ
சிந்தனைக்கும் சொந்தக்காரி

விட்டு விட்டேன் என்னை
கட்டுண்டேன் உன்னிடம்

விடையளிப்பாயா! கடவுளே!

விடையளிப்பாயா என்னையும் பெயர்த்த
புதியவனே! கடவுளே!
புதிராகிப் போனாய் புரியாமல் நானும்

பாவங்கள் போக்கிடவே பல மக்கள்
உண்டியலை நிரப்புகின்றார்
பாவம் ஏனோ?
உணவிலா மக்களை மறக்கின்றார்

கண்ணிலா குருடராய் நடிக்கின்றார்
கண்டும் உதவி தர மறுக்கின்றார்
மக்களில் தனி அடையாளம் காணுகிறார்
மனிதம் மறந்தே போகிறார்

உறவுக்கும் உயிர் தர பொருள் வேண்டுகிறார்
உணர்வு நிலை அறிய மறுக்கின்றார்
காசிருந்தா காதலும் தருகின்றார்
கடவுளே! கடைசியில் உன்னைத்தான் நாடுகிறார்

இப்படித்தான் நானும் வாழனுமா இன்னும்
எப்படித்தான் விடையளிப்பாயா என்னையும் பெயர்த்த
புதியவனே! கடவுளே!

அவனும் ஆளாக வேண்டும்

அவனும் ஆளாக வேண்டுமென்ற எண்ணமோ
அடி மனதில் நெடுநாளாய்..

அவன் பேரில்தான் அத்துனையும்

எங்கே இருக்கிறான்?
இப்போது பிரகலாதன் வினவினாலும்
ஆச்சரியமில்லை

கண்ணில் தெரியும் மனிதர்கள்
தொலைந்து போய்
காணாத உனக்காகதான்
பலிகள் பல பெயரில்

மதம் பிடித்து மதங்கள்
இப்போது
மனிதனை விலங்காக்கும்
முயற்சியில்..

வந்துவிடு இங்கே
ஒரு முறை எங்களோடு
வாழ்ந்துதான் பாரேன்..

மரித்து போன மானுடம்

வீதியில் வாழும்
தாய் ஒருத்தி
மேள சத்தம் கேட்டு
தெரு வழி நோக்கினாள்
பால் குடம் தூக்கி
மங்கையர் கூட்டம்
உலகம் வாழ
தெய்வத்தை வேன்டி சென்றார்

தாயின் இடுப்பில்
குழந்தை அழுதது
பாலுக்கு!

காதல் கிறுக்கல்

புண்ணகையில்
எனை ஈர்த்த மலரே
உன்
கண்ணசைவில்
காதலை காட்டிவிட
வேண்டுகிறேன் நானே
பெண்ணே!
உன் அசைவில் உளறுகின்றேன்
போதை கொண்டெ நெஞ்சம்
தேடிடுமே உன்னை
பேதை நீயும் வாட்டலாமோ
என்னை

காதல் கனி ரசம் - "காதல் மொழி"

சின்னஞ்சிறு ஆசைகள் தோணுதே
சுகம் பெருகுதே மனம் மகிழுதே
கண்ணங்கரு விழிகள் காட்டிவிட்ட
காவியமே நெஞ்சின் ஓவியமே

குளிர் காற்றுமிங்கே சுடுகிறதே
உனது முகம் நினைக்கையிலே
நட்சத்திரம் சிரிக்கின்றது
ஓ.. என் காதல்
மெல்லத்தான் பூக்கிறது

கார்கால மேகமாய் கூந்தல் தன்னை
தள்ளினாய் தேன் மழை பொழியுதே
இன்பம் பொங்குதே
என் மனதிலெ வெண்ணிலா கதை சொல்லுதே
சுகம் அள்ளுதே

வாசமெலாம் உன்னிடத்தில் தருகிறேன்
நாளும் உனை தொடந்திடத்தான்
காதல் வழி தெரிகிறது
நம் காதல் மொழி இனிக்கிறது
மனதிலே நாளும்

கண்ணீர் அஞ்சலி

மும்பை நகரின்
இருளைக் கிழித்தாய்
இரவை தொலைத்தாய்
கடமை நினைத்தாய்
காத்து நின்றாய்

வேற்றவனை
மனிதகுல வேற்றவனை
வெற்றி கொண்டாய்
என்னுயிர் வீரா
உன்னுயிர் ஈந்தாய்
மக்கள் தம் எமக்காக

தாய் நாடு காத்த
உனைப் போற்ற
எம் மக்கள் இங்குண்டு
உன் இழப்புக்கு
ஈடு செய்ய
ஏதுண்டு இங்கேதான்

சிந்துகின்றோம் கண்ணீரை
வற்றாமல்..
இதயத்தில் இருத்திக்கொண்டோம்
இனி வரும் தலைமுறை
உன் புகழ் சொல்ல

Tuesday, December 2, 2008

காதல் கனி ரசம் - "கணாக் காணும் நேரமிது"

கணாக் காணும் நேரமிது
மனதில் சுகம்பெறும் மாலையிது
எண்ணிலா வண்ணங்களில்
வெண்ணிலா ஆடுது
மனமெலாம் உனையெ நாடுது

கண்ணிலே இந்த
பெண் நிலா பட்டாதால்
எண்ணிலா கனவுகள்
பெண்ணிலா உன் மீதுதான்

நெஞ்சிலே என் நெஞ்சிலே
கவிதைகள் ஊறுது
சுவைப்பலா நீ சுவைப்பலா
உனது புகழ் பாடுது


சொல்லிலா உன் சொல்லிலா
செவி வாடுது
பூவிலா நல்ல தேன்பலா
நீ கூடும் நேரமிது

வாழ்விலா நீயிலா வாழ்விலா
வசந்தம்
முகமிலா உன் முகமிலா
உயிர் உருகுது

எந்தன் உயிர் உருகுது
அழகே வா
கணாக் காணும் நேரமிது
மனதில் சுகம்பெறும் மாலையிது

காதல் வலி - "என் ஜீவனே"

சின்னக்கிளி என் செல்லக்கிளி
என்னை விட்டு போகுது
மனம் ஏங்கி வாடுது
சுகம் நீங்கி போகுது

உன் பார்வையில் என் காவியம்
என் கண்களில் உன் ஓவியம்
என்றும் மறையாதது
விட்டு பிரியாதது

காதலில் உன்னை நினைக்கையில்
சுகம் வந்தது
நீ நீங்கயில் நீரோடையில்
கண்கள் மிதக்கின்றது

குயிலோசையில் மன ஆசையில்
பாடித் திரிந்தது
விட்டு போகையில் காதலில்
இதயம் அழுகின்றது

என் ஜீவனே என் கீதமே
என் வாசமே நீங்காதே
என் தீபமே என் வேதமே
நீங்கினால் உயிர் வாழதே

பூங்கொடி அன்புத்தாயடி
பூவிழி நீ தேன்மொழி
உன் மடி என் படி
உலகம் நீதானே

காதலின் சாபமோ
ஏக்கமே என்று தீறுமோ
தூக்கமே போனது
உணராயோ பொன்மானே

Monday, December 1, 2008

காதல் தேவதையே!

வெண்பனித் தாரகை செம்மலர் மேனகை
பூவிதழ் விரித்தாள் சுவைநீர் தெறித்தாள்
மைவிழி பூங்குழலி கைவளை இசைத்தாள்
தெள்தமிழ் இறைத்தாள் மனம் பிடித்தாள்

முத்து மணிச் சரம் பற்கொண்டாள்
பித்து பிடித் தேறும் சொற்கொண்டாள்
நடை யழகினில் மயில் தனைக்கொண்டாள்
நித்தம் தனைத் தேடும் எழிற் கொண்டாள்

பற்றிட கைப்பற்றிட மென்மலர் மென்மை
கற்றிட்ட வித்தைகள் களவுபோனது உண்மை
வென்றிட யாருள சொல்லிங்கு இல்லை
சென்றிட மனமேங்கும் ஏது எல்லை

நீ, நான் மற்றும் காதல்

பெண்ணே!
பழகிய நாட்கள்
தனிமை பேச்சு
எனக்கென்ற நீ
இவைகளை எளிதாய்
மறந்து போனாய்
உன் திருமணத்தில்...

என்னை தனிமைப்படுத்திய நீ
சொல்ல மறந்தாய்
உன் நினைவுகளுக்கு..
அவைகள்
என்னைப் பின்னியே
எப்போதும்...

Friday, November 28, 2008

காதல் வலி - "என் காதல்"

என் காதல் உன்னை வந்து
சேரவில்லையா
ஏங்கி மனதுள் நானும்
புழுங்கவில்லையா
என்னோடு நானே உன்னை
தேடுகின்றேன்
கண்ணீரில் நானும்
வாடுகின்றேன்

காதல் என்னும் தேரிலே
நானும் பறந்து வந்தேன்
மனம் வாடி நானே
வந்த வழியில் நின்றேன்
உன்னோடுதான் எந்தன்
வாழ்வு மானே
தவிக்கிறேன் எனக்குள்
நானே

வாசம் போன பின்னே
பூவிருந்தும் என்ன
தேவி நீயும் போன பின்னே
நானும் இருந்து என்ன
கண்கள் இங்கு தூங்குமோ
இதயம் உன்னை மறக்குமோ
கண்ணீரில் நானே வாடுகின்றேன்

காதல் கனி ரசம்- "பூ மகள்"

புதிய பாடல் மனதோடு தோன்றும் வேளை
பூவை முகம் காண வேண்டும் - அதில்
நாளும் சுகம் காண வேண்டும்

என்னில் விளைந்த கற்பனை யாவும்
உனக்கே உரிமையாக வேண்டும் - என்
உயிரெ நீயாக வேண்டும்

இதய வானில் ஒளிருகின்ற நிலவே
பரந்த உலகில் என் மனதில் உன் முகமே - அது
தேடுவதும் நாடுவதும் உனைத்தான் தினமே

வா நில் தா ஒரு சொல் மனம் மகிழுமே
போ என்றலும் இரு என்கிறது மனமே - நீ
விழிகளில் விழும் சுகமோ?

Tuesday, November 25, 2008

காதல் வலி - "நினைவுகளே"

நினைவுகளே நினைவுகளே நீங்கிவிடுங்கள்
நீலம் பூத்த மைவிழியை மறந்துவிடுங்கள்
காதலில் அலைந்தேன் கனவினில் திரிந்தேன்
அவள் உள்ளம் புரிந்ததம்மா
என் வாழ்க்கை கரையுதம்மா

ஏற்றி வைப்பாள் தீபமென்று
ஏந்திழைக்கு காத்திருந்தேன்
காத்திருந்த காலமெல்லாம் வீணாக போகுதம்மா
கண்மனியை நாயகியாய் கனவினில் கண்டேன்
கண்டது கனவென நினைவில் சொன்னாளே

கற்றுக்கொண்டேன் பாடங்கள் காதலினால்
பெற்றுக்கொண்டேன் துன்பங்கள் அவள் நினைவால்
பூந்தாரகை எனை மறந்தாலும் பிரியேன் அவள் கனவுகளோடு
ஒருதலையாய் காதல் கொண்டேன்
அவள் ஒருவளுக்கே என் வாழ்வை தந்தேன்

Monday, November 24, 2008

உன்னாலே! உன்னாலே!

ஒவ்வொரு முறை முயன்றும்
தோற்றுப் போகிறேன்
உன் பார்வையில்........


ஜன்னல் கம்பிகளில்
கண்பட்டுத்தான்
இதயம் சிறைபடுகிறது....


அணை கடந்த வெள்ளமாய்
நான்!
தொலைவில் வருகிறாள்
காதலி....


நீ வந்தாய்
நிலவு ஒளிர்ந்தது
நானும்தான்.....


கண்கள் செலுத்திய
காதல் ஏவுகனை
உன் பார்வை...

அடை மழையிலும்
நிலவு!
எதிர் வீட்டு ஜன்னல்

காதல் கனி ரசம் - "ஆனந்தம்"

ஆனந்த தேரிலேறி
ஆசையோடு பாடுகிறேன் - நான்
ஆனந்த தேரிலேறி
ஆசையோடு பாடுகிறேன்
காதல் தேவதையை கண்டுவிட்ட
களிப்பினிலே காதல் கீதம்
பாடுகிறேன்

நேற்று வரை நான் வேறே
இன்று முதல் நான் வேறொ
காட்சி தந்த காதலியை
கனவிலும் நினைவிலும்
ரசிக்கிறேன்

துடிப்புடனே உதட்டிலும்
வார்த்தைகள் ஒத்திகை பார்க்குமெ
அவள் அருகினிலே தடுமாறுமே

கண்ணோடு நான் பேசிய
கதைகள் மாறுமோ?
பேச்சோடு தேன் தந்த
சுவைதான் தீருமோ?

எனை ஆளும் ரோஜாவே
என்னிதயம் உன் வழியில்
நம் காதலில் உருகுமே
இன்பம் பெருகுமே

காதல் வந்தால்..

கண்கள் மகிழும்
உனை கண்டால்
என் புண்ணகையும்
உன்னால் அர்த்தமாகிறது
புலன்கள் யாவுமே சுகமாய்
பூவே உன்னாலேதான்

உன் சுவாசக் காற்றில்
சுழலும் காற்றாடியானேன்
என் இதயத்தில் புகுந்து
புது விசையுமானாய்
நீ காந்தமானய்
எனை மட்டும் ஈர்த்துக் கொன்டாய்

நீ இல்லாமலும் மகிழ்கிறேன்
உன் நினைவுகளால்
கனவுகளை நீட்டிக்க முயல்கிறேன்
உன்னிடம் நெருக்கமாவதால்
இப்படியே வாழ்ந்து விட
என் காதல் ஏங்குது

Friday, November 21, 2008

காதல் கனி ரசம் - "சுகமான இராகங்கள்"

சுகமான இராகங்கள் நாளும்
என் மனதில் இசைக்கின்றது
சுவைத் தேன் பெண்ணல்லவோ
கீதம் புனைகின்றது

முகம் தேடி எங்கெங்கோ
அலைகின்றேன் உன்
மனம் நாடி எனை
சேர்த்திட முயல்கின்றேன்

மணமாலை நிதம் சூட்டி
உனை பார்க்கின்றேன் அந்த
மண நாளை உன்னிடம்
எதிர் பார்க்கிறேன்

அழகான மான் போல
மறைந்தோடினாய்
இனிதான நினைவோடு
உயிர் வாழ்கிறேன்

பால் போன்ற சிரிப்போடு
எனை மாற்றினாய்
பழகாத உன் பெண்மைக்கு
மெருகூட்டினாய்

Tuesday, November 18, 2008

காதல் கனி ரசம்- "பெண்ணோவியம்"

பெண்ணோவியம் உயிர் கொண்டதோ
இங்கு நாளும் புது காவியம்
புனைகின்றதோ

இளம் நெஞ்சில் இனிதான
நினைவலைகள் புரல்கின்றதோ
சுகம் விளைகின்றதோ

சுவை தேடும் என்னுயிர் உனைத்தேடுது
மறைந்தோடும் உன்னழகை
மனம் பாடுது

மலர் போன்ற மங்கை உன் விழி பேசுது
மௌனம் உனது புகழ்
சேர்க்குது

நீ வரும் பாதை என்னாசை எதிர் பார்க்குது
பெரும் போதை உன் இதழோரம்
இருக்கின்றது

பெண்ணோவியம் உயிர் கொண்டதோ
இங்கு நாளும் புது காவியம்
புனைகின்றதோ

Friday, November 14, 2008

காதல் "திவால்"

எங்கு சென்றாய் இதயம் விட்டு
உன் காலடி சுவடுகள்
இன்னும் இங்கே

தென்றல் உன் சுவாசக் காற்றாய்
இலைகளின் அசைவுகள் உன் கொலுசாய்
பறவயின் ஓசை உன் சிரிப்பாய்
இன்னும் இங்கே
எங்கு சென்றாய் இதயம் விட்டு

மணித்துளிகள் நொடிகளானது
இப்போது நொடிகளும் யுகங்களாய்
உன் மௌனம் பேசியது
இன்று கொல்கிறது
எங்கு சென்றாய் இதயம் விட்டு

நீதான் நானென்றாய்
யாரோவாகினென் இன்றோ
கேட்டுப்பார் உனக்குள்
இருப்பேன் இன்னும்
முதலில் புகுந்தவன் முடிவில்லாதவன்
இன்னும் இங்கே
எங்கு சென்றாய் இதயம் விட்டு

அன்பெ சிவமென்றென் நீயுமென்றேன்
பொருளாதரம் என்றாய்
நிதி சிக்கலில் என் காதல்
தீரும்வரை நான்
இன்னும் இங்கே
எங்கு சென்றாய் இதயம் விட்டு

Wednesday, November 12, 2008

என்னை மறந்துவிடாதே

நான் கவலையய் இருக்கும்போது
என்னுடன் அமர்ந்து என்னை தேற்று
நான் சுகவீனம் படும்போது
எனக்காக பிரார்த்தனை செய்
நான் மகிழ்ச்சி கொள்ளும்போது
நீயும் மகிழ்வடை
நான் இறந்து போனால்
எனக்கக அழு
ஆனால்! கண்மனியே!
நான் வாழும்பொழுது
என்னை மறந்துவிடாதே

Thursday, November 6, 2008

காதல் ஒரு நீர் குமிழி

காதல் ஒரு நீர் குமிழி
அழகாய் ஈர்ப்பாய்

அழகும் ஈர்ப்பும் நிலைப்பதில்லை
நீர் குமிழி போல

பல வண்ணம் காட்டும்
காற்றிலும்! கனவிலும்

பரிதவிக்கும் மனம்
குமிழி கலைந்துவிட்டால்

வேறொன்றும் தோன்றலாம்
அழகாய் ஈர்ப்பாய்

உனைப் போல
உயிரோடு ஓட்டுமோ?

காதல் ஒரு நீர் குமிழி
அழகாய் ஈர்ப்பாய்

உன்னைப் போல!

காதலே சுகம்

இளைய மகள் வருகிறாள்
இனிய உறவு தருகிறள்
மனம் நாடும் உன்னைத்தான்
எந்நாளும்

இது ஒரு புது நினைவு
இது ஒரு புது உறவு

எந்நாளும் உனைத்தேடும்
என்னிதயம்
நெஞ்சில் நிறைந்தாயெ
நீ ஒரு புது உதயம்

என் விழிகளில் என்றும்
உன்தன் உருவம்
மறந்தேனே
எந்தன் பருவம்

இது ஒரு புது நினைவு
இது ஒரு புது உறவு

காலங்கள் மாறிடினும்
காதலிங்கு குறைவதில்லை
கண்மனியெ எந்தனுள்ளம்
உனையும் மறந்தததில்லை

இது ஒரு புது நினைவு
இது ஒரு புது உறவு

என்னிடம் வந்தாயே
உறவுகள் நீங்கி
அன்பினை தந்தாயே
அளவுகள் இன்றி

உயிரோடு கலந்த சொந்தம்
அழியாமல் என்றும் நிலைக்கும்

இது ஒரு புது நினைவு
இது ஒரு புது உறவு

Tuesday, October 28, 2008

நீயே! என்றும்..

என்..
துன்பம் பகிர்ந்தாய்
நலம் பெற வேண்டினாய்
மகிழ்ச்சியில் மகிழ்ந்தாய்
இறந்துபோனால் அழுவாய்

கண்மனியே!
உயிர்! வாழும்
வாழ்வில் எனை மறவாதிருந்தால்!

Monday, October 20, 2008

கைப்பிடி அழுத்தம்

என் கைப்பிடி அழுத்தம்
உன் கண்களின் சக்தியால்!
உனக்கான வாக்குறுதிகள்
உன் உண்மையான அன்பினால்!
ஆம் பெண்ணே !
உன் விழிகளில் விழுந்து
என் இதயத்தை இடம்மாற்றி விட்டேன்
உன்னிடம் பத்திரப்படுத்த!
காதல் மட்டும் என்னிடம்..
காதல் வந்த பின்பு
காத்திருப்பது கடினமில்லை
நீ! வந்த பின்பு
உன் கைகளில் என் அழுத்தம்
காதல் தந்த ஊக்கம்
காலம் கடந்தும் நிற்கும்

Sunday, October 12, 2008

வட்ட நிலவே வந்துவிடு!

கண்ணே! உனைக் காணமல் கண்ணீர் விடும் மேகம் நான்
பிரிவால் உந்தன் மீது கூடும் மோகம்தான்
உன்னை நினைத்தாலே எனக்குள் சூழும் ஏக்கம்தான்
அது உன்னால் ஏற்பட்ட தாக்கம்தான்
தவித்திருந்தேன் மனதுக்குள் சோகம்தான்
மறந்தேன் பெண்ணே நானும் தூக்கம்தான்
கெட்டு மனம் சுத்திவரும் உன்னைத்தான்
பட்டு மனம் போய்விடுமெ நீ நீங்கிடத்தான்
இதயம் தொட்ட பந்தம் நம்மை தொடர்ந்திடத்தான்
வட்ட நிலவே வந்துவிடு!
வாழ்க்கையை எனக்கு தந்துவிடு!

Friday, October 10, 2008

நிலவே! நீயே !

தொலை தூரத்து நிலவே
என் விழிகளில் எப்போது விழுவாய்
அணைத்து செல் அழைப்புகளும் உனதாய்...
இதயத்தில் ஒரு இடமாற்றம்!
நாட்கள் கூட நகர மறுக்கிறது
உனது இஸ்கிராப் இல்லாமல் !!

அன்பே! அன்பே!

என்னை பற்றி உனக்கு
அறிமுகம் தேவை இல்லை!
உன்னுள் இருப்பவன் நான்
எப்படித்தான் முடிந்தது
உன்னால்!
அசைக்க முடியாத
மலையும்!
உன் உதட்டு ஓர
சிறு ஊதல்
சாய்த்து விட்டதே!

Tuesday, September 30, 2008

விழியே! விழியே!

நினைவில் நீயே!
------------------------------

விழிகள் இமைக்க மறுத்து உன் வரவை தேட
நினைவிலும் உன் முகமே எப்போதும்

உள்ளத்தில் ஆசை வைத்தெ
உதிர்கின்றன நாட்களெல்லம்

அலை அலையாய் புரல்வதெல்லம்
அடி மனதில் உன் எண்ணங்கள்

சிலை சிலையாய் நிற்கின்றென்
உனை பார்க்கும் பொழுதெல்லம்

கனவுகள் கலைவதில்லை
நினைவுகள் உன் மீதே இருப்பதால்

செல்லுமிடமெங்கும் கவனம் வேறில்லை
செழு மலர் நீ வந்து விட்டால்....

நீ என் பார்வைலிருந்து மறையும்போதுதான்
என்னை நான் உணர்கிறென்

அதற்குள் என் பார்வைகள்
எத்தனையோ முறை பரிதவிக்கிறது