Thursday, January 29, 2009

உனை நினைக்க ஒரு நாள்!!


அமைதியாய்..
ஆர்ப்பரிக்கும் கடலே!
ஆழிப்பேரலையாய்
சிரித்து சிதைத்து..
வாரிச்சுருட்டி வலிமைக்காட்டி
ஆனதோ!
ஆண்டுகள் நான்கு

இப்போதுதான் தெரிகிறது
உனை நினைக்க
ஒரு நாள்! வேண்டுமென்பதில்
இத்தனை இழப்புகளா?
எங்களுக்கு

நீ வற்றினாலும்
வற்றுமோ எங்கள் கண்ணிர்
வடுவாகிப்போன வாழ்வுக்கு

புத்தாண்டே நீ வருக!


அன்பை வெளிக் கொணர்ந்திங்கே
மானுடம் வாழ வைப்போம்
மனதில் நல்லெண்ணம் வளர்த்திங்கே
பயனுற வாழ்ந்திடுவோம்
இனிய சொல் இயம்புதற்க்கே
இனியேனும் முயற்சிப்போம்
பணிவாய் பண்பாய் பழகுதற்க்கே
துணிவாய் முடிவெடுப்போம்
இருந்தது இவ்வாறென வாதம்களைந்திங்கே
இனிசுகமெனும் நிலைபடைப்போம்
படைத்தவன் யாரென சண்டை விட்டிங்கே
பலர்நலம் வாழ பழகிக்கொள்வோம்
புதுவிடியல் புதுச்சிந்தனை பெற்றிங்கே
பொலிவாய் வாழ்ந்திட! புத்தாண்டே நீ வருக!

கொண்டாடுவோம் போகிதனை


நற்சிந்தனை துடைப்பம் கொண்டு
மனதின் அழுக்குகள் கூட்டி பெருக்கி
அகத்தே மண்டியிருக்கும் மாசுகளை
அறிவுறு ஒட்டடை கோல் கொண்டு
துடைத்து நீக்கி ஒன்றாய்
இனிதான காலைப் பொழுதில்
தீயிட்டு திரும்ப வாராமல்
எரித்து கொண்டாடுவோம் போகிதனை

பொங்கலோ பொங்கல்


எங்கும் நிறை வளமும்
தங்கும் நிரந்தர செல்வமும்
பொங்கும் மன மகிழ்வும்
யாவரும் பெற்றிடவே பொங்குவோம்
பொங்கலோ பொங்கல்

உழுது உயிர்காக்கும் உழவர்
தொழுது போற்றி நல்
பொழுது நிறைந்திட எவர்க்கும்
நன்றாய் விளங்கிடவே பொங்குவோம்
பொங்கலோ பொங்கல்

கலத்தில் காத்த விதைநெல்
நிலத்தில் விதைத்து வளர்
காலத்தில் கதிராய் முற்றி
செழுமை தந்தாய் கதிரவா!
பொங்கலோ பொங்கல்

பொங்கட்டும் உள்ளத்தில் அன்பு
தங்கட்டும் மனிதரில் மனிதம்
நீங்கட்டும் இன மத பேதம்
நன்றாய் ஒன்றாய் வாழ்ந்திட
ஏதுவாய் உலகமிருந்திட பொங்குவோம்
பொங்கலோ பொங்கல்