Saturday, May 8, 2010

மற்றுமொரு நாள் காத்திருக்கும்

கோடையில் சருகாகும்
மரங்களில் விழும்
மழை நீர் உயிராகும்

மரமென நானிருந்தேன்
உன் விழிப்பார்வையில்
நான் உயிரானேன்

பற்றுதற்கு தவிக்கும்
கொடிக்கு துனையாகும்
கொம்பே உறவாகும்

கொடியென நானிருந்தேன்
உன் விழிப்பார்வையில்
உறவென்று பற்றானேன்

யாசிக்கும் மனிதருக்கும்
பசி நிறைக்கும்
உணவே வாழ்வாகும்

யாசிப்பவனாய் நானிருந்தேன்
உன் விழிப் பார்வையில்
நேசிக்கும் வாழ்வடைந்தேன்

வருந்தும் உள்ளத்திற்கும்
தேற்றும் ஆறுதல்
ஒரு மருந்தாகும்

வருந்தியவனாய் நானிருந்தேன்
உன் விழிப்பார்வையில்
துயரம் துறந்தவனானேன்

முற்றும் துறந்தவருக்கும்
ஒன்றினை பற்றுவதே
பேரின்ப மகிழ்வாகும்

பற்றற்று நானிருந்தேன்
உன் விழிப்பார்வையில்
பேரின்பம் பெறலானேன்

விழிக்கொரு மொழியிருக்கும்
ஒலியின்றி பல
பொருளுரைக்கும்

ஒலியின்றி நானிருந்தேன்
உன் விழிப்பார்வையில்
பொருட்டென மாறினனே...

இன்னும் பலவிருக்கும்
உன் பார்வைக்கு
என்னோடு...
மற்றுமொரு நாள் காத்திருக்கும்

No comments: