Wednesday, April 21, 2010

என்ன என்ன மாற்றங்கள செய்யப் போகிறாய்..

விண்ணில் விளையாடும் நிலவென்றேன்
கண்ணில் உனைக்காணும் வரை அதுவே அழகென்றேன்
அடை மழைக்காலம் குளிர்ச்சியென்றேன்
அட! உனைக்காணும் வரை அதுவே மகிழ்ச்சியென்றேன்

வருடும் தென்றல் சுகமென்றேன் நீ
வரும்போது அதுவொரு சிறுசுகம் உணர்ந்தேன்
காண்பவை மகிழ்வென்றேன் உனைக்
கண் பார்த்த பின் நீயே அதில் முதல் என்றேன்

இப்படி நிலை மாற்றி என் உள்ளே புகுந்து விட்டாய்
எப்படி ஒரு பார்வையால் இதைச் செய்து விட்டாய்
மையெழுதும் காரிகையே நீ காதலெழுதிவிட்டாய்
கவியெழுதும் பாவலனாய் மாற்றியெனை விட்டாய்

இதோ! இதோ! நீ வருகிறாய்.. மீண்டும்
அதே! அதே! பார்வை யொன்றை வீசப் போகிறாய்
இன்னும் என்ன என்ன மாற்றங்கள் இனி
என்னிடத்திலே செய்யப் போகிறாய்?

முதன் முதலாய்..

"ஒரு வேலைகூட செய்யறதில்லை"
தினம் அம்மாவிடம்
அர்ச்சனை பெறும் அவளும்

"ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லை"
காலையில் காதுகளில் பாயும்
அப்பாவின் ஆதங்கத்துடன் அவனும்

"பாக்கெட்" பால் வாங்க
நிற்கும்வரிசையில்
பார்வைகள் பரிமாறிக்கொண்டு
"ப்ராக்கெட்" போட்டுக்கொள்ள

அர்ச்சனையும் ஆதங்கமும்
அவசியமற்று போனது
மறுநாள் முதன் முதலாய்..

"வெயில் - ஒரு இலவசத் திட்டம்"

சூரியனின்..
கோடைக்கால
சிறப்பு ’மொட்டைத் திட்டம்’
"வெயில்" ல்

மொட்டை அடித்து
கொண்டன மரங்கள்

மரங்கள்
ஏமாற்றப்பட்டதாக
புகார் எழுப்புகிறது
"காற்று"
அனலை வீசியபடி..

எதிர்க் கட்சியின்
புகாரை புறந்தள்ளி
மொட்டை மரங்களின்
எண்ணிக்கை கூடி

"வெயில்" திட்டம்
வெற்றி பெற்றதில்

"வறட்சி" க்கான
ஆலோசனையில்
தீவிரப்பட்டது
"சூரியன்"


குளிர்சாதன அறைகள்
வழக்கம் போல
திட்டம்
சரியா? தவறா? யென
விவாதத்தை
முடிப்பதாயில்லை