Tuesday, May 25, 2010

என்னவென்று நான் பேசலாம்!

வாசமாக மலர்கள் பேசலாம்
உன் தலைச்சூட நாளும் ஏங்கலாம்
மழையாக வானம் பேசலாம்
நீ நனைவதால் மகிழ்ச்சி கொள்ளலாம்
ஒளியாக நிலவு பேசலாம்
உன் அழகு குறிப்பை கேட்டு வாங்கலாம்
ஒலியாக பறவைகள் பேசலாம்
உன் பேச்சில் மயக்கம் கொள்ளலாம்
கருணையாக இதயம் பேசலாம்
உன் இரக்கத்தில் மனிதம் வாழலாம்
கவிதையாக காதல் பேசலாம்
நீயென்பதால் வார்த்தைகள் இனிமையாகலாம்
மௌனமாக கண்கள் பேசலாம்
அழகுக்கோர் அழகும் ஆகலாம்
என்னவென்று நான் பேசலாம்
சொல்! எப்படி உன்னுயிரில் கலந்துபோகலாம்....

Saturday, May 22, 2010

காதலினால்.. உன் காதலினால்...

அன்பே உந்தன் நினைவுகள் இங்கே
உள்ளம் சூழ்ந்து கொல்லுதே
கண்ணில் ஒரு வெள்ளம் இங்கே
என்னை இழுத்து செல்லுதே

காதலினால்.. அது உன் காதலினால்...


மை பூசிய விழிகள் என்னை
மறந்துதான் போனதென்ன
கை கோர்த்து நடந்த நாட்கள்
விலகித்தான் போனதென்ன
நெருக்கம் தான் பிரிந்து சென்று
வேடிக்கை பார்க்குது இன்று
இனிவருமா அந்நாட்கள்
மனமின்று கேட்கிறதே
பதிலேதும் இல்லாமல்
மௌனம் ஒன்று நிறைகிறதே


இரு கைநீட்டி மழைநீரில் நீயும்தான் நனைத்தாயே
ஒரு கைப்பிடித்த நீராலே முகத்தில்தான் அடித்தாயே
நனைவோம் வா என்று என்னைத்தான் இழுத்தாயே
தலை நனைத்த மழைத்துளியை வளைகரத்தால் துடைத்தாயே
தாவணியால் குடை ஒன்றை பிடித்தாயே

மழைக்காலம் வரும் போதெல்லாம்
சொல்லும் அவை நம் கதைகள்
இனிவருமா அந்நாட்கள் மனமின்று கேட்கிறதே
பதிலேதும் இல்லாமல் மௌனம் ஒன்று நிறைகிறதே
பெய்யும் மழைத்துளிகள் இன்று உன் ஞாபகங்களை தெறிக்கிறதே
பொய்யோ உன் பிரிவென்று இதயம் இன்னும் துடிக்கிறதே

காதலினால்.. அது உன் காதலினால்...

உயிர் உருக்கும் நிமிடங்கள்

"சொல்லியாச்சு"

பெரு மூச்சு விட்டபடி
இளைப்பாறிக் கொண்டிருந்த
காதலை சொல்லத்
தவித்த நாட்கள்...

விளையாட்டின்
வெற்றி தோல்வியை
நிர்ணயிக்கும்
கடைசி நிமிடங்களாய்
சுருங்கி

உயிரில் உருகியபடி...

ஒப்புதலுக்கு
கரைந்து கொண்டுடிருந்தன

Saturday, May 8, 2010

மற்றுமொரு நாள் காத்திருக்கும்

கோடையில் சருகாகும்
மரங்களில் விழும்
மழை நீர் உயிராகும்

மரமென நானிருந்தேன்
உன் விழிப்பார்வையில்
நான் உயிரானேன்

பற்றுதற்கு தவிக்கும்
கொடிக்கு துனையாகும்
கொம்பே உறவாகும்

கொடியென நானிருந்தேன்
உன் விழிப்பார்வையில்
உறவென்று பற்றானேன்

யாசிக்கும் மனிதருக்கும்
பசி நிறைக்கும்
உணவே வாழ்வாகும்

யாசிப்பவனாய் நானிருந்தேன்
உன் விழிப் பார்வையில்
நேசிக்கும் வாழ்வடைந்தேன்

வருந்தும் உள்ளத்திற்கும்
தேற்றும் ஆறுதல்
ஒரு மருந்தாகும்

வருந்தியவனாய் நானிருந்தேன்
உன் விழிப்பார்வையில்
துயரம் துறந்தவனானேன்

முற்றும் துறந்தவருக்கும்
ஒன்றினை பற்றுவதே
பேரின்ப மகிழ்வாகும்

பற்றற்று நானிருந்தேன்
உன் விழிப்பார்வையில்
பேரின்பம் பெறலானேன்

விழிக்கொரு மொழியிருக்கும்
ஒலியின்றி பல
பொருளுரைக்கும்

ஒலியின்றி நானிருந்தேன்
உன் விழிப்பார்வையில்
பொருட்டென மாறினனே...

இன்னும் பலவிருக்கும்
உன் பார்வைக்கு
என்னோடு...
மற்றுமொரு நாள் காத்திருக்கும்

"டாட்டா"

"செல்லம்.. அம்மா.. பாய்டா!"

தொடரும்
பிஞ்சு விரல்களின்
கையசைப்பில்

 அலுவலகம்
ஒரு இடைவெளியை
நிரப்பியிருந்தது...

Monday, May 3, 2010

வழியும் புன்னகை

சட்டெனப் பூக்கும் பூவின்
மலர்ச்சியென மழலையின்
கன்னக்குழியில் கபடின்றி
வழியும் புன்னகை
விளக்குதற்கோ விளங்குதற்கோ
அவசியமற்று ஓர்
அவசியத்தை கற்பித்து
தேங்குமே இதயத்தில்..

"சார்ஜ்" இன்றி

விளைவுகளின்
கவலையின்றி
மின்சாரக் கம்பிகளின்
மீதமரும் பறவைகளென
காதலின் மீதமர்ந்து
காத்திருக்கிறேன்
பறவையை புறக்கணிக்கும்
மின்சாரமாய்
உன் தவிர்த்தலில்
"சார்ஜ்" இல்லாமல்
தவிக்கிறது "காதல்"