Monday, July 26, 2010

நீ ஒரு காதல் சங்கீதம்


பூந்தோட்டத்தின் வாசம் கொணர்ந்து
தேனை உதட்டில் தாங்கி
வார்த்தைகளை அதில் ஊறவைத்து
பூனையினை மிஞ்சுகிறாள்

வளையலுக்கும்
மௌனம் பழக்கி
தோகை விரிக்கும் மயிலென
கை விரித்து
மலர் விரல்களில்
பின்னின்று கண் மூடுகிறாள்

விடும் மூச்சில்
வெப்பம் பரப்பி
தொடும் உணர்வில்
விடுகதை விடுகின்றாள்

இதயத்தில் இருப்பவளை
அறியாமல் போவேனோ?
தெரியாமல் தவிப்பதாய்
தெரிந்தே யாரது? என்கின்றேன்...

வளையல் இசைக்கின்றாள்
கொலுசில் சொல்? சொல்?
என்கின்றாள்
விரல்களில் கண்
வருடுகிறாள்
பின்பும்
வீம்புக்கும் இருந்தேன் நான்

இன்னும் நெருக்கமாய்
வாசம் பரப்புகின்றாள்
கேட்டாலும் நெருங்காத காதலி
இன்னும் தன்னை
அறியவில்லையே
என ஏங்குகிறாள்...

தேன் ஊறிய வார்த்தைகளில்
தேடிப்பிடித்து
"ஹுஹம்" தருகிறாள்
பொறுமையின்றி
"லூசு" என்று
தின்னப் பிடித்த
மற்றொன்றை தருகிறாள்

"சங்கீதா"
என்றவுடன்
விருட்டென்று...விரல்
உருவுகிறாள்...

யாரவள்?
விழியில் கோபம் ஏற்றி
முன்னின்று
முடிந்ததா? என் காதல்
என்றாள்

குறும்பாய்ச் சொன்னேன்
விழியழகே! அழகே!
காதல் விளையாட்டு
கண்மனி இதுவென்று
சிவந்த விழிகளை விடு
சிவந்த கன்னம் கொள்

வாசம் சொன்னது
உன் வருகை
நேசம் சொன்னது
உன் விரல்கள்
நெருக்கம் சொன்னது
உன் அன்பு
விடுவதற்கு மனமில்லை
விழிதிறக்க எண்ணமில்லை

நீ காத்திருக்க
காதல் விடவில்லை
வாழ்வின் சங்கீதம்
நீயானாய்.. சங்கீதா வென்றேன்
சங்கதி வேறில்லை..

வெட்கி சிரிக்கின்றாள்
கண் நோக்க மறுக்கின்றாள்

விழிமூடிய நொடிப்பொழுதின்
காதலில் மூழ்குகின்றோம்
சற்றே தள்ளிப் போங்கள்
தனிமை இப்போது
தேவையாயிருக்கிறது

No comments: