Wednesday, June 23, 2010

தனிமை

மௌனம் நிரம்பி
அழைப்புகள் ஏதுமில்லாமல்
தொடங்கிய நாளில்

வீசுதல் ஏதுமின்றி
நிசப்தத்தின் தன்மை
அறிவித்தபடி....
அறையின் உள் புகும்
காற்று

வார்த்தைகளற்ற
தனிமையின் கவிதையொன்றை
அறையெங்கிலும்
வாசிக்கிறது

எழுதுகோலும் காகிதம்
ரசித்து இருக்க கூடும்
அவையும்
தொடர்பின்றி இருந்தன..

குறுக்கீடு ஏதுமின்றி தொடரும்
இப்பொழுதில்
தனிமை... முழுவதுமாய்
ஆக்கிரமித்து இருந்தது..
விடுபட
விருப்பமில்லாமல்..

உணர்வுகள் உலரும் பொழுதுகள்

கொடும் வாளின் கொல்லும்
தடம் பிடித்து மிரட்டும் தனிமையில்
தீண்டும் காற்றென்னை தீயாய் சுடும்
வேண்டாப் பொழுதாய் கழிக்கவியலா
தலையனையின் தற்காலிக ஆறுதல்
மலையருவியென கண்ணீரில் முளைக்கும்
நேய மணாளன் நினைவில் நெகிழ
சுயமாய் பரவும் உணர்வின் அலைகள்

மாண்டவன் வரவியலா மாளுதலில்
தீண்டா மெய்யில் பொய்யாய் புலர்ந்த விடியல்
வீரியத்தை கூட்டி தனிமையின் கைகோர்த்து
இரவின் விளையாட்டில் இம்சையாகும்
இன்னுமோர் தனிமை பொழுதில்
பெண்ணின் உணர்வுகள் உலர்ந்து...

பிரிவு உணரும் தனிமை

முன்தினம்
கோவத்தின் உச்சியில்
தூக்கியெறியப்பட்ட
நட்பிற்காய்

தொடர்பில் இல்லாத
இந்நாளில்
தனிமை என்னை
திட்டி தீர்க்கிறது...
தாராளமாய்.....

Tuesday, June 22, 2010

தனிமையின் தேவை

"நாளைக்கு வந்திருவேன்" என்றவளை
வழியனுப்புவதில் ஒளிந்திருக்கும்
ஒரு மகிழ்ச்சி!

கேள்விகளோ!
பதில் எதிர்பார்த்தலோ
இல்லாமல்...
ஒரு நாள்
ஒரு தனிமை

ஞாயிற்று கிழமை வேறு..
சொல்லவா வேண்டும்!
அலுவலகம் இல்லை
"ஆத்துக்காரியும்" இல்லை
உணர்ந்தவர்களுக்கே
இத் தனிமை "ஒரு சொர்கம்"

வார்த்தைகளின் "சீற்றத்திலே"
தொடங்கும் காலைப் பொழுதும்
அதிலே முடிவடையும்
மாலைப் பொழுதும்

அலுவலக நாட்களின்.. பரபரப்பு இப்படித்தான்..

புரிந்திருப்பீர்கள்.. இப்பொழுது
இந்த தனிமை...
கேள்விகளோ..
பதில் எதிர்பார்த்தலோ... இல்லாமல்
கழிவது... எவ்வளவு சுகமானது என்று

செல்போன் ஒலிக்கிறது..
"ரிங் டோனில்" தெரிந்தது...
அவள் தான்... அவளேதான்

"நீங்கள் தொடர்பு கொண்ட நபர்
தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்
சிறிது நேரம் கழித்து அழைக்கவும்"

என்றதில்..

ஹும்..

தனிமை ... இப்பொழுது
சுகமாய்...
சிகரெட் புகையின்
பல வடிவங்களில்
வெளிப்பட தொடங்கியிருந்தது...

Tuesday, June 15, 2010

காதல் இதுதானா... காதல் வலிதானா...

தனிமையில் இன்றென்னை விட்டுவிட்டாய்..
ஏனோ... உன் நினைவுகளை கூட்டி செல்ல மறந்துவிட்டாய்
நான் இன்று தவிப்பதும்.. துடிப்பதும்.... உனக்கே..
நீயின்றி நானாய் வாழ்வேனா.... இல்லை
உயிரின்றி... உடலாய்.. கிடப்பேனா...
நீ மறைகிறாய்... நான் கரைகிறேன்
ஓ... காதல்... இதுதானா... காதல் வலிதானா..

நிலவின்றி தவிக்கும் வான் போல
இருள் சூழ்ந்து போனதே! ஒளி என்பது
உன் வரவென்று ஆனதே...
நீரின்றி தவிக்கும் செடி போல
வாடிப் போனதே! வாழ்வென்பது
நீயென்று ஆனதே....
நீ மறைகிறாய்... நான் கரைகிறேன்
ஓ... காதல்... இதுதானா... காதல் வலிதானா..

சொல்லாமல் என் உள்ளே வந்தாய்
ஏனடி.. இன்று கொல்லாமல் கொல்லுகின்றாய்
இல்லாமல்... போவேனே.. நீ இல்லையென்றால்...
மெழுகாய் கரையுதே! உடல்....
காதலில்... உயிர் எரியுதே....
அணைக்கும் விரல்களை தேடுதே...கண்களே!
நீ மறைகிறாய் ... நான் கரைகிறேன்
ஓ... காதல்... இதுதானா... காதல் வலிதானா..

சிறகுகள் பறித்து சென்று... இன்று
தனிமையில் சிறைவைத்தாய்...
உறவொன்றில் விலகிச்சென்று..
கண்ணீர் பரிசு தந்தாய்...
இல்லாமல்... போவேனே.. நீ இல்லையென்றால்...
மெழுகாய் கரையுதே! உடல்....
காதலில்... உயிர் எரியுதே....
நீ மறைகிறாய் ... நான் கரைகிறேன்
ஓ... காதல்... இதுதானா... காதல் வலிதானா...

அன்பில் ஒரு பொய்


"அப்பா! எப்பமா வருவார்"

மழலையிடம் எழும்
வினாவில்

நாளைக்கு...

என்றதில்

அன்பில் ஒரு பொய்
நிரப்புகிறாள்

அப்பாவோ
சிரித்தபடி
புகைப்படத்தில்
ஒரு நினைப்பை
விதைக்கிறார்

மழலையின்
மற்றொரு முறை
இதே வினாவுக்கு....

பதிலுரைக்க
கண்ணீர் நிரப்புகிறாள்
இன்றே!...

அடிச்சேன்னா! பாரு

காத்திருக்கும் பொழுதுகளில்
மலரில் முத்தமிட்ட
வண்டொன்றை கேட்டேன்

"உனக்கெப்படி தாரளமாய்
இப்படி ஒரு அனுமதி" யென்று

"அது மட்டும் ரகசியம்" மென
ரீங்காரமிட்டு சென்றது..

இதோ அவள் வருகிறாள்
இம்முறையும் கேட்பேன்

"அடிச்சேன்னா! பாரு"

இப்போதே அவள் குரல்
காதை திருகி ஒலிக்கிறது